கோலாலம்பூரில் ஆசியான் உச்சநிலை மாநாடு முழுவீச்சில் செயல்படுக அனைத்து அமைச்சுகளுக்கும் பிரதமர் உத்தரவு .

கோலாலம்பூர்,

ஆசியான் உச்சநிலை மாநாடு கோலாலம்பூரில் மே 26 தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது. இம்மாநாடு நடத்தி முடிக்கப்படுவதற்கு அனைத்து அமைச்சுகள்- ஏஜென்சிகள் இடையிலான ஒத்துழைப்பு மிக அணுக்கமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றுக் கேட்டுக்கொண்டார்.

2025 ஆசியான் தலைமைத்துவத்தை மலேசியா ஏற்றிருக்கின்ற நிலையில் ஏற்பாடுகள் அனைத்தும் மிகச்சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று அவரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைடா கூறினார்.

மக்களின் நலன்கள், உறுப்பு நாடுகளின் ஆக்கப்பூர்வ பங்களிப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த உச்சநிலை மாநாட்டின் முடிவுகள் இருக்க வேண்டும் என்று மலேசியா உறுதியுடன் இருக்கிறது என்று பிரதமர் இலாகா விளக்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தம்முடைய ஃபேஸ்புக் நேரலையில் துங்கு நஷ்ருல் தெரிவித்தார்.

இந்த உச்சநிலை மாநாட்டிற்கான செயல்பாடுகள் அனைத்தும் மிகவும் சுமுகமாக இருக்க வேண்டும். எவ்வித தங்குதடையுமின்றி மிகச்சிறப்பாக இம்மாநாடு நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதில் பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் என்று அவர் மேலும் சொன்னார்.

அந்த இரண்டு நாட்களும் சாலைகளில் வாகனப்போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட வேண்டும். பொது வசதிகள் மீதான நெருக்குதல்களும் குறைக்கப்பட வேண்டும். அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதேபோன்று தனியார் துறையினரும் அவ்வாறு செய்வதற்கு ஊக்கமளிக்கப்படுகின்றனர். மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு அறிவிக்கும் என்று துங்கு நஷ்ருல் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here