கோலாலம்பூர் :
ஜோகூரில் உள்ள லாபிஸ், ஜாலான் இப்ராஹிம், புக்கிட் கெசெவாவில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் உயர வரம்பைக் கவனிக்க தவறிய ஒரு லோரி ஓட்டுநரின் அலட்சியத்தால் அவரது வாகனம் அச்சுரங்கத்தில் சிக்கிக் கொண்டது.
இந்த சம்பவம் நேற்று (மே 15) மாலை 4.28 மணிக்கு நிகழ்ந்தது, இதனால் லோரி மூன்று மீட்டர் உயர இடைவெளி கொண்ட சுரங்கப்பாதைக்கு மேலே உள்ள பாலத்தில் மோதியதில் அதன் மேல் பகுதி குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்தது என்று, சிகாமாட் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஹ்மட் ஜம்ரி மரின்சா கூறினார்.
விபத்து நடந்தபோது 20 வயதுடைய ஓட்டுநர் லாபிஸிலிருந்து சிலாங்கூருக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் , சுரங்கப்பாதையின் உயரக் கட்டுப்பாட்டை ஓட்டுநர் கவனிக்கத் தவறியதால் லோரியின் மேல் பகுதி உள்ளே சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநர் காயமின்றி தப்பினார் என்று அவர் மேலும் கூறினார்.
“போக்குவரத்து விதிகளை பின்பற்றத் தவறியதற்காக 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 79(2) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அஹ்மட் ஜம்ரி சொன்னார்.




















