ஐக்கிய நாடுகள் மனித குடியேற்ற திட்டத்தின் தலைமைப் பதவியைப் பெறும் சாதனை முயற்சியில் மலேசியா களம் காண்கிறது

கோலாலம்பூர்,

எதிர் வரும் 2026-2029ம் ஆண்டு தவணைக்கான ஐநா எனப்படும் ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்றத் திட்டத்தின் (யுஎன் ஹேபிடட்)தலைமைத்துவ பதவியை வகிப்பதற்கான வரலாற்றுச் சாதனையைப் படைக்க தீவிர முயற்சிகளோடு மலேசியாவும் களமிறங்கியுள்ளது.

இதன் பொருட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வியூகங்களையும் திட்டங்களையும்  வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு வகுத்து செயற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தற்போது அந்தத் தலைமைத்துவப் பொறுப்பை வகிக்கும் மெக்சிகோ, 2026 உலக நகர மாநாட்டை ஏற்று நடத்தும் அஸர்பைஜான்,வியூக சகாவான ஈரான் ஆகியவற்றுடன் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு இருதரப்பு சந்திப்பு கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகிறது.

மலேசிய வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தலைமையிலான சிறப்புக் குழு இதற்கான உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு அறிக்கைவழிதெரிவித்தது.

பல்துறை விவகாரங்கள், அடிப்படை மனித உரிமைகள் விவகாரத்திற்கான மெக்சிகோ தலைமைச் செயலாளர் என்ரிகோ  ஜேவியர் ஒச்சோவா மார்டிநெருடன் நைரோபியில் உள்ள ஐநா மனித குடியிருப்பு தலைமையகத்தில் இருதரப்பு சந்திப்பும் நடத்தப்பட்டது.

நைரோபியைச் சென்றடைந்தவுடன் அமைச்சர் ங்கா கோர் மிங் தலைமையிலான சிறப்புக் குழு, ஐநா மனித குடியேற்றத் திட்டத்தின் தலைமைப் பொறுப்புக்கான நாட்டின் தலையாய நோக்கத்தை வெளிப்படுத்துவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளில்  முனைப்போடு இயங்குகிறது. வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ வீரா எம். நோர் அஸ்மான், கென்யாவுக்கான மலேசிய உயர் ஆணையத்தின் ஆணையர் ருஸைமி முகமட் உள்ளிட்டோரும இந்தப் பேராளர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

ஆக்கப்பூர்வ மேம்பாட்டு இலக்கு அமலாக்கம் தொடர்பிலான பன்முக நோக்கம் கொண்ட மாநாட்டிலும் கோர் மிங் சிறப்புரையாற்றினார். இத்தாலியும் ஐநா மனித குடியேற்ற மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாடு ஆற்றல் வாய்ந்த மேம்பாட்டை இலக்காகக் கொண்டதாக அமைந்திருந்தது.

கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி ஐநா மனித குடியேற்ற மன்றத் தலைவராக பொறுப்பு வகித்த மெக்சிகோவின் அனுபவ ஆற்றலைப் பற்றிய விவரங்களை  அறிந்துக் கொள்ளும் மலேசியாவின் அவாவும் இந்தச் சந்திப்பு கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது.

மேலும் இந்தத் தலைமைத்துவப் பதவிக்கான வேட்பாளராக மலேசியா களமிறங்குவதன் தொடர்பிலான அனைத்துலக ஆதரவைத் திரட்டும் நோக்கத்தின் அடிப்படையிலும் அந்தச் சந்திப்பு நடைபெற்றது.

ஐநா மனித குடியேற்ற மன்றத்தின் செயற்பாடுகளை வெற்றிகரமானதாக்க முந்தைய தலைமைத்துவத்தும் விட்டுச் செல்லும் சாதனைப் பயணத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதில் மலேசியா கொண்டுள்ள கடப்பாட்டின் தொடர்பிலான உத்தரவாதத்தையும் கோர் மிங் அந்த மாநாட்டில் வெளிப்படுத்தினார்.

நான்காண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஐநா மனித குடியேற்ற மன்றத்தின் தலைமைத்துவத்தைத் தேர்ந்தெடுக்கும் பேரவை நடைபெறும். வட்டாரத் தரப்புகளின் அடிப்படையில் சுழற்முறையில் இந்தத் தலைமைப் பதவிக்கான தேர்வு நடைபெறும். அமெரிக்க லத்தின், கரிபியன் வட்டாரப் பேராளாராக விளங்கிடும் மெக்சிகோவின் தலைமைத்துவ காலம் முடிவடைந்தவுடன் ஆசிய பசிபிக் வட்டார நாடுகளுக்கான முறை அடுத்ததாக வருகிறது.

அனைத்துலக ஆதரவை வலுப்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில்  அஸர்பைஸான், ஈரான், பிரேசில் ஆகிய நாடுகளுடன் இருவழி சந்திப்புகளையும் மலேசியா நடத்தும். உலக அரங்கில் ஆக்கப்பூர்வமான நகர மேம்பாட்டுத் திட்டங்களில் மலேசியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான களமாக இந்தச் சந்திப்புகள் அமைந்திருக்கும் என்று ங்கா குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பையும் உட்படுத்திய,ஆக்ககரமான, தூர நோக்குச் சிந்தனைக் கொண்ட உலகமய நகர மேம்பாட்டுக் கொள்கையை வரையறுப்பதில் மலேசியா கொண்டுள்ள தனித்துவமான பங்களிப்பை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சிகள் அமைந்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here