ஐ.நா. மனிதக் குடியேற்றத் திட்டத்திற்கான தலைமைப் பொறுப்புக்கு மலேசியா தேர்வு புதிய வரலாற்றுச் சாதனை

நைரோபி (கென்யா), 

ஐ.நா.வின் மனிதக் குடியேற்றத் திட்டத்திற்கான தலைமைப் பொறுப்பை மலேசியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதன் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்லை நாடு அடைந்திருக்கிறது என்று வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

2025 – 2029 தவணைக் காலத்திற்கு இத்திட்டத்திற்கான தலைமைப் பொறுப்பை மலேசியா ஏற்றிருக்கும். கென்யா தலைநகர் நைரோபியில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித குடியேற்றப் பேரவையின் 193 நாடுகள் இத்திட்டத்திற்கு மலேசியா தலைமை ஏற்பதை ஏகமனதாக அங்கீகரித்திருக்கின்றன.

நைரோபியில் நடைபெற்ற ஐ.நா. மனிதக் குடியேற்றப் பேரவையில் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டபோது இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

மலேசிய பேராளர் குழுவினரை வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் பிரதிநிதித்தார். மெக்சிகோ நாட்டிலிருந்து இந்தத் தலைமைப் பொறுப்பை மலேசியா ஏற்றுக்கொண்டது. இதற்கு முன்னர் லத்தின் அமெரிக்க நாடுகளையும் கரிபியன் வட்டார நாடுகளையும் மெக்சிகோ பிரதிநிதித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆசிய பசிபிக் வட்டாரத்தைப் பிரதிநிதிக்க ஐக்கிய அரபு சிற்றரசுடன் கூட்டாக நிர்வாக வாரியத்திலும் இடம் பெற்றுள்ள மலேசியா, இந்தத் தலைமைப் பொறுப்பையும் திறம்பட நிறைவேற்றும்.

ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டின் ஒத்துழைப்புடன் தலைமைப் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதனைத் திறம்பட நிறைவேற்றுவோம் என்று அமைச்சர் ஙா கோர் மிங் பேரவையின் நியமனத்தை ஏற்றுக்கொண்டபோது உரையாற்றினார்.

வட்டார ஒற்றுமை, நகர்ப்புற வளர்ச்சிக்கான எங்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்தத் தலைமைப் பொறுப்பு பிரதிபலிக்கிறது. இந்தப் பேரவை உலக இலக்கையும் உள்ளூர் உண்மை நிலவரங்களையும் ஒருங்கிணைக்கும் என்று அமைச்சர் ஙா கூறினார். ஐ.நா.வின் மனிதக் குடியேற்ற செயல்திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கத்தில் மலேசியாவும் ஐக்கிய அரபு சிற்றரசும் புதிய நகர்ப்புற செயல் திட்டத்தை அமல்படுத்துவதில் முயற்சிகளை இரட்டிப்பாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவுக்கு இது வரலாற்றுப்பூர்வ சாதனையாகும்.பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்தின் கீழ் அனைத்துலக அரங்கிற்கு நமது நாடு திரும்பியிருப்பதை இது நிரூபித்திருக்கிறது. அதுமட்டுமன்றி அனைத்துலக ரீதியிலான செல்வாக்கும் நமக்கு அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது. ஆனாலும் இந்த விஷயத்தில் மக்களின் ஆதரவு மிக முக்கியமானதாகும் என்றும் அவர் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு சிற்றரசைச் சேர்ந்த ஷேய்க் ஸாயிட் வீடமைப்புத் திட்டத்தின் தலைமை இயக்குநர் முகமட் இப்ராஹிம் அல் – மன்சூரியும் இதில் உரையாற்றினார். ஐ.நா. மனிதக் குடியேற்றப் பேரவையின் தலைமைப் பொறுப்புக்கு ஐக்கிய அரபு சிற்றரசு தேர்வு செய்யப்பட்டது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். அதோடு மலேசியாவுடன் இணைந்து இத்திட்டத்தின் நிர்வாக வாரியத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததும் நாங்கள் பெற்ற கௌரவம் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here