மணமக்கள் அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு காரணம் என்ன?

இந்துக்களின் திருமணத்தில் வெறு தாலி கட்டுவது மட்டும் திருமணம் கிடையாது. அதற்கு பின்னால் பல அர்த்தங்கள் உள்ளது. இவை ஒவ்வொன்றிற்கும் சாஸ்திரத்தில் பல்வேறு காரணங்களும், அர்த்தங்களும் சொல்லப்படுகின்றன.

அவற்றில் ஒன்று தான் அக்னியை சாட்சியாக வைத்து திருமாங்கல்யம் அணிவித்த பிறகு, புதுமண தம்பதிகள் அக்னியை சுற்றி ஏழு அடிகள் எடுத்து வைத்து வலம் வருவது. இதற்கும் பலரும் பலவிதமான காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால் சாஸ்திரம் இதற்கு ஆழ்ந்த அர்த்தம் ஒன்றை குறிப்பிடுகிறது.

இந்த ஏழு அடிகளுக்கும் ஏழு விதமான காரணங்களும், பலன்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. திருமணத்தின் போது எதற்காக அக்னியை ஏழு அடிகள் வைத்து வலம் வருகிறார்கள் என்ற காரணம் இதுவரை உங்களுக்கு தெரியாது என்றால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

அக்னியை ஏழு அடிகள் வைத்து வலம்  வருவதை சமஸ்கிருதத்தில் ‘சப்தபதி’என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும்.

அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு தனது பிரார்த்தனையைச்சொல்கிறான்.-

– முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.
– இரண்டாம் அடியில்: ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
– மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.
– நான்காவது அடியில்: சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும்.
– ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்.
– ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.
– ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்.

என்று பிரார்த்தனை செய்வதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல் விஷயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும் என்பது சாஸ்திரம்.

உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டி விடுவோம் அல்லது அவர்களை முன்னே போக விட்டுவிடுவோம்.

முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம். இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம். இதை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து “நம் இந்து தர்மத்தில்” அதை ஒரு சம்பிரதாயமாக வைத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here