பினாங்கில் RM1.8 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

கோலாலம்பூர்:

பினாங்கில் சுங்கத் துறையினர் மேற்கொண்ட தனித்தனி நடவடிக்கைகளில் சுமார் RM1.8 மில்லியன் மதிப்புள்ள 18 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஏப்ரல் 16 அன்று நடந்த ஒரு நடவடிக்கையில், சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் குழு, பத்து கவானில் உள்ள போஸ் மலேசியாவின் மெயில் கூரியர் மையத்தில் மதியம் 1 மணியளவில் பார்சல்களை சோதனை செய்ததாக அதன் மாநில இயக்குனர் ரோஹைசாத் அலி தெரிவித்தார்.

அப்போது மோப்பநாயின் உதவியுடன் போதைப்பொருள் கண்டறிதல் சோதனை நடத்தப்பட்டது, இதில் கஞ்சா என்று நம்பப்படும் உலர்ந்த மொட்டுகள் அடங்கிய நான்கு பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் இன்று வியாழக்கிழமை பாகன் ஜெர்மலில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் எடை 2.2 கிலோவுக்கு சற்று அதிகம் என்றும், அவற்றின் மதிப்பு RM219,128 என்றும் அவர் கூறினார்.

அங்கிருந்த பார்சல்களில் ஒன்பது யூனிட் “காமிக்ஸ் புத்தகம்” இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது, மேலும் அந்த பார்சல் பெறுநர் இல்லாததால் “மீள அனுப்பும் பார்சல்” என்ற தரநிலையுடன் UK க்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்தாக அவர் மேலும் கூறினார்.

பார்சல்களின் உரிமையாளரை அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து, மார்ச் 4 ஆம் தேதி காலை 11.35 மணியளவில் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் நடந்த மற்றொரு நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான பொருள்களைக் கண்டுபிடித்தது. அதில் கஞ்சா என்று நம்பப்படும் 29 வெளிப்படையான உலர்ந்த செடியின் பொட்டலங்கள் இருப்பதை சோதனைகள் கண்டறிந்ததாக ரோஹைசாத் கூறினார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சுமார் 16.2 கிலோ எடையுள்ளது என்றும் சுமார் RM1.5 மில்லியன் மதிப்புள்ளவை போதைப்பொருள் என்றும் அவர் கூறினார்.

மேலதிக விசாரணைகளில் குறித்த பொருட்கள் சீனாவிலிருந்து வந்ததாகக் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B(1)(a) இன் கீழ் இரண்டு வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார், இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் 12 பிரம்படிகளுக்கு குறையாமல் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here