கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தைத் இங்கிலாந்து ராணி தவிர்ப்பது ஏன்?

இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடிசூட்டிக்கொள்ளும் விழாவில், ராணி கமீலா பார்க்கர் கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தைத் தவிர்ப்பது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மன்னர் முடிசூட்டு விழா

இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து, மக்களின் மனங்களையும் கவர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதியன்று ஸ்காட்லாந்தில் உள்ள பால் மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து அவரது மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான சார்லஸ் (வயது 73), அந்த நாட்டின் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவர் மன்னர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. அப்படியே அழைக்கப்படுகிறார்.

அடுத்த மாதம் 6ஆம் தேதி, மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா லண்டனில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.

ராணி அணியும் கிரீடம்

இந்த முடிசூட்டும் விழாவில் மறைந்த ராணியும், தனது மாமியாருமான இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தைத்தான், ராணி கமீலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை அவர் அணியப்போவதில்லை என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடத்துக்கு பதிலாக ராணி மேரி அணிந்திருந்த கிரீடத்தைத்தான் ராணி கமீலா பார்க்கர் அணியப்போகிறார் என உறுதியாகி இருக்கிறது.

கோஹினூர் வைரம்

இந்த கோஹினூர் வைரம், இந்தியாவில் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். இதன் எடை 105.6 கேரட். இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் வைத்திருந்தார் என்றும், அது 1857-ம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்குப் பின்னர் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்ததாகும்.

இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரத்தை இங்கு மீட்டுக்கொண்டு வர வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. ஆனால், இந்த வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து திட்டவட்டமாக அறிவித்து விட்டது.  ஆனாலும் சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை. இந்த நிலையில்தான் ராணி கமீலா பார்க்கர், இந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிவதைத் தவிர்த்துள்ளார்.

சர்ச்சையை விரும்பவில்லை…. இதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

*கோஹினூர் வைரம் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம் என்று அரண்மனை அறிந்து இருக்கிறது. எனவே முடிசூட்டும் விழாவில் ராணி கமீலா பார்க்கர் அந்தக் கிரீடத்தை அணிந்து, அது ஒரு சர்ச்சை ஆக வேண்டாம் என்று அரண்மனை நினைக்கிறது.

* “அடிப்படையில், கிரீடத்தில் உள்ள நகைகளைப் பற்றி தனி விவாதம் செய்யாமல், பாதுகாப்பான மற்றும் விவேகமான காரியத்தைச் செய்ய அரண்மனை முடிவு செய்துள்ளது.

* முடிசூட்டும் விழா முடிந்தவரையில், பலதரப்பட்ட சமூக நம்பிக்கைகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் மன்னரின் விருப்பமாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here