லண்டன்: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா மோதும் ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
ஆடவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மட்டுமே ஐசிசி நடத்தும் அனைத்து வடிவிலான உலகக் கோப்பை தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டங்களில் அந்த அணியை வீழ்த்துவது என்பது மற்ற அணிகளுக்கு கடினமாகவே இருந்து வருகிறது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் 13 முறை இறுதிப் போட்டியில் கால்பதித்து 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
தற்போது உலகலாவிய தொடரில் 11-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை சந்திக்கிறது நடப்பு சாம்பியனான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலிய அணி கடந்த முறை இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி தொடர்களில் ஒரே ஒரு முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அந்த அணி பட்டம் வென்றிருந்தது. அதன் பின்னர் பலமுறை அந்த அணி நாக் அவுட் சுற்று வரை வருவதும் வெளியேறுவதுமாக இருந்துள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது.
2023-25-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 30 வீரர்களை பயன்படுத்தியது. இது மற்ற அணிகளைவிட அதிகமாகும். பார்மில் இருந்த வீரர்களை பேட்டிங், பந்துவீச்சில் சரியாக பயன்படுத்தி வெற்றிக்கான வழிகளை கண்டறிந்தது. அந்த அணி கடைசியாக விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை குவித்து முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
2023-25-ம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதவில்லை. கடைசியாக இரு அணிகளும் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின. சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த தொடரை ஆஸ்திரேலியா 2-0 என வென்றிருந்தது.
தென் ஆப்பிரிக்கா அணி இந்த சுழற்சியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் மோதவில்லை. அந்த அணி ஒட்டுமொத்தமாக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளை பதிவு செய்திருந்தது. அதேவேளையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை உள்ளூர் டி 20 தொடருக்காக புறக்கணித்து இருந்தது.
ஆஸ்திரேலிய அணி 19 டெஸ்ட் போட்டிகளிவில் விளையாடி 13 வெற்றிகளை பெற்றிருந்தது. கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது ஆஸ்திரேலிய அணி. இந்த சுழற்சியில் அந்த அணி வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்டில் மோதவில்லை.