போதைப்பொருள் கலந்த வேப் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் ஆன்லைன் விற்பனையை அரசு தடுக்கும் – ஃபாஹ்மி

கோலாலம்பூர் :

போதைப்பொருள் கலந்த வேப் பொருட்கள் உட்பட தடைசெய்யப்பட்ட பொருட்கள் இணையம் மூலமாக விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான அமலாக்க நடவடிக்கைகளை மூன்று முக்கிய அமைச்சகங்கள் விவாதங்களுக்குப் பிறகு அமல்படுத்தவுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்ஸில் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை (ஜூன் 18) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ​​உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி, மருந்துகள் அல்லது போதைப்பொருட்கள் என வகைப்படுத்தக்கூடிய அல்லது வேப்பிங் சாதனங்களுடன் தவறாகப் பயன்படுத்தப்படும் ஆன்லைன் தயாரிப்புகளின் விற்பனை அதிகரித்து வருவது குறித்து கவலையடைவதாக கருத்துக் கூறியதற்கு, பதிலளிக்கும் விதமாக அவர் இதனை தெரிவித்தார்.

“ நானும், சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அகமட்டும் விரைவில் சந்தித்து தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீதான அமலாக்க நடவடிக்கைகள் குறித்து விவாதிப்போம், இதில் செயலிகள், சமூக ஊடக தளங்கள் மற்றும் பொதுவாக தடைசெய்யப்பட்ட மருந்துகள் இருப்பதாக நம்பப்படும் திரவங்களை விற்பனை செய்வது உட்பட அனைத்தையும் ஆராய்வோம்,” என்று தகவல் தொடர்பு அமைச்சராகவும் இருக்கும் ஃபாபஹ்மி கூறினார்.

இந்த நடவடிக்கை அத்தகைய தயாரிப்புகள் ஆன்லைனில் பரவலாகக் கிடைப்பதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.

தனிப்பட்ட விற்பனையாளர்கள் அல்லது அத்தகைய விற்பனையை செயல்படுத்தும் தளங்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கும் நோக்கில், சட்டதிட்டங்கள் அடங்கிய மசோதா விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here