ஈப்போ:
கம்போங் ஜாவாவில் உள்ள Kinta Riverfront Service Suite -இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடி வீட்டின் பின்புற பால்கனியில் இருந்து விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.
சம்பவம் தொடர்பில் இன்று மதியம் 12.20 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாகவும், எட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமட் தெரிவித்தார்.

ஏழாவது மாடியில் உள்ள அவரது வீட்டின் பின்புற பால்கனியின் ஏர் கண்டிஷனர் கம்ப்ரசர் பகுதியில் இருந்து 20 வயது பெண் ஒருவர் அங்குள்ள இரண்டாவது மாடியில் விழுந்து கிடந்ததைக் குழு கண்டறிந்ததாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வலது தொடையில் எலும்பு முறிந்துள்ளதுடன் வேறு பல காயங்களும் ஏற்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு சுகாதார அமைச்சக மருத்துவக் குழுவால் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
























