கோலாலம்பூர் :
பினாங்கில் நடைமுறைக்கு வரவிருக்கும் முத்தியாரா லைன் LRT திட்டத்திற்கான கள ஆய்வு, நிலம் கையகப்படுத்தல் மற்றும் இழப்பீடு போன்றவற்றுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது எனினும், திட்டத்தின் முழுமையான கட்டுமான பணிகள் தொடங்க பதிவுசெய்யப்பட்ட உத்தியோகபூர்வ அனுமதி (Notice to Proceed) இன்னும் மத்திய அரசால் வழங்கப்படவில்லை என மாநில முதல்வர் சௌ கான் யோவ் தெரிவித்தார்.

“முழு அளவிலான கட்டுமானம் திட்டமிட்டபடி செயற்பட, அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு மிகவும் முக்கியமானது என்று கூறிய அவர், தற்போது வரை, போக்குவரத்து அமைச்சு மற்றும் MRT Corp-இன் உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என அவர் இன்று நடந்த Penang Transport Day 2025 நிகழ்வின் பிறகு தெரிவித்தார்.
இந்த புதிய முத்தியாரா LRT லைன், பினாங்கு சிலிக்கான் தீவு முதல் கோம்தார் வரை செல்லும் வகையில், பினாங்கு தீவு மற்றும் ஜார்ஜ் டவுன் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் திட்டமாகும். இதன் மூலம் சாலையோர போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தை மாநில அரசு MRT Corp-க்கு முற்றாக ஒப்படைத்துவிட்டதாகவும், இதற்குமுன் இத்திட்டத்தை கையாண்ட SRS Consortium நிறுவனத்திடமிருந்து குறித்த திட்டம் இப்போது முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சௌ தெரிவித்தார்.
“இப்போது, LRT திட்டத்திற்கான முழு பொறுப்பும் மத்திய அரசிடமே உள்ளது. அறிவிப்பை வெளியிட வேண்டியது அவர்களது கைகளிலேயே உள்ளது,” என அவர் கூறினார்.




















