சிப்பாங்,
சைபர்ஜெயா நகரில் நடந்த 20 வயதான பல்கலைக்கழக மாணவி கொலை வழக்கில் இன்று காலை செபாங் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மாணவியின் உறவினராக நம்பப்படும் ஒரு நபர் சந்தேக நபர்களை அழைத்து வரும்போது திடீரென பெரும் சத்தமாக கூச்சலிட்டு நெருங்கினார்.
சிவப்பு சட்டை அணிந்திருந்த அவர், “வொய்! நீங்க தான் என் தங்கச்சியை கொன்றீங்க! ” என உரத்து கூச்சலிட்டார்.
முக்கிய சந்தேகநபர் மற்றும் இரண்டு பெண் சந்தேகநபர்கள், இன்று காலை 9.50 மணியளவில் நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேறும் தருணத்தில் இந்த பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் உடனடியாக மோதலை தடுக்க விரைந்து நடந்து, நிலைமையை கட்டுப்படுத்தினர்.
முன்னதாக, போலீசார் முக்கிய சந்தேகநபர் மற்றும் இருவருக்கும் ஜூலை 10 வரை 7 நாட்கள் காவல் நீட்டிப்பு பெற்றிருந்தனர்.
இதனிடையே “என் கட்சிக்காரர் குற்றவாளி என்று போலீசார் பொது அறிக்கையால் கூறுவது சட்டத்திற்கு எதிரானது. விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. குற்றம்சாட்டப்படுபவர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படுவதற்குமுன் குற்றவாளி என கூற முடியாது.” என வழக்கறிஞர் மனோகரன் கூறினார்.





















