புகழ்பெற்ற நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஃபீனிக்ஸ்’.
வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வெளியான இப்படத்தை திரைப்பட சண்டைப் பயிற்சியாளரான அனல் அரசு இயக்கியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் ஒருவரைப் பலர் முன்னிலையில் பொது இடத்தில் வெட்டிக் கொலை செய்யும் 17 வயதுச் சிறுவனையும், காவல்துறை அவனைக் கைது செய்து சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பதையும், கொலையுண்ட அரசியல்வாதியைச் சார்ந்தோர் சிறுவனைக் கொல்லத் துடிப்பதையும் இப்படம் விவரிப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அறிமுக நாயகன் சூர்யா சேதுபதி மிகச் சிறப்பாக நடித்திருப்பதாகப் பலரும் பாராட்டுகின்றனர்.
சண்டைக் காட்சிகள் உட்பட, தனது கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாகப் பங்களித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
முதலில் அவ்வளவாக மனத்தில் பதியாத காட்சிகள், நாயகனின் பின்புலக் கதை புரிந்த பிறகு நன்றாகவே இருப்பதாகத் தோன்றுவதாகப் படத்தைப் பார்த்தவர்கள் குறிப்பிடுகின்றனர். சண்டைக் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது என்பது அவர்களின் கருத்து.
அனல் அரசுக்கும் இயக்குநராக இது முதல் படம். கதைக் கருவிலோ திரைக்கதை அமைப்பிலோ புதுமைகள் ஏதும் இல்லாவிட்டாலும் தொய்வில்லாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள்.
அவரே சண்டைப் பயிற்சியாளர் என்பதால் சண்டைக் காட்சிகள் நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன என்றும் அம்மாவாக தேவதர்ஷினி, வில்லியாக வரலட்சுமி சரத்குமார், மேலும் இதர கதாபாத்திரங்களில் நடித்தோரிடமிருந்து தேவையான நடிப்பைப் பெற்று வழங்குவதில் அனல் அரசு தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
சூர்யா சேதுபதி தனது ‘ஃபீனிக்ஸ்’ படம் வெளியாவதற்குமுன் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
சூர்யா சேதுபதி தனது ‘ஃபீனிக்ஸ்’ படம் வெளியாவதற்குமுன் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இவ்வேளையில், படம் திரை காண்பதற்குமுன் நடிகரும், தமிழக வெற்றிக் கட்சியின் தலைவருமான விஜய்யை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் சூரியா சேதுபதி.
சந்திப்பு குறித்து மகிழ்ச்சியுடன் இன்ஸ்டகிராமில், “எப்போதுமே உங்களை வியந்து பார்த்துள்ளேன். என் பயணத்தில் உங்கள் ஆதரவை ஒருபோதும் மறக்கமாட்டேன் தளபதி,” எனப் பதிவிட்டுள்ளார் சூரியா சேதுபதி.
‘ஃபீனிக்ஸ்’ படம் திரை காணுமுன்பு சிறப்புக் காட்சியாகப் பிரபலங்களுக்கும் செய்தியாளர்களுக்கும் திரையிடப்பட்டது. அதைப் பார்த்த பலரும் சூர்யா சேதுபதியின் நடிப்பை மிகவும் பாராட்டியுள்ளனர்.
அவருக்கு இது முதல் படம் மாதிரியே தெரியவில்லை என்று புகழ்ந்துள்ளனர்.
குறிப்பாக இயக்குநர் விக்கிரமன், சண்டைக் காட்சிகளில் பிச்சு உதறிவிட்டார் சூரியா சேதுபதி என்று கூறியதுடன் 20, 30 படங்களில் நடித்தவரைப்போல் அவரது நடிப்பு இருப்பதாகவும் கூறினார்.
மேலும், விஜய், அஜித்தால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இட்டு நிரப்ப சூரியா சேதுபதி பொருத்தமானவர் என்றும் புகழ்ந்துள்ளார் விக்கிரமன்.
படக்குழுவினருக்கு இது மகிழ்ச்சி அளித்துள்ளது.
செய்தியாளர்களுக்கான சிறப்புக் காட்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, “இந்தப் படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் வெளியாகுமுன் என் மகன் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்தத் துறையில் முதலில் இப்படித்தான் நடக்கும். அதை அப்படியே கடந்துவிடவேண்டும் என்று கூறியிருக்கிறேன்,” என்றார்.
படத்தைப் பார்த்த திரை விமர்சகர்கள் பலரும் சூரியா சேதுபதி நடிப்பில் தடம் பதித்திருப்பதாகவே கூறுகின்றனர்.
படம் திரைகாணுமுன் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான போதும் கதைத் தேர்வு, நடிப்பு, செய்தியாளர் சந்திப்புப் பேச்சுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தினால், தனது திரைப் பயணத்தின் அடுத்தகட்டத்தில் சோடை போகமாட்டார் எனப் பலரும் கருத்துரைத்துள்ளனர்.
அவருக்குத் திரைத்துறையில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் சிலர் ஆரூடம் கூறியுள்ளனர்.