[பி.ஆர்.ராஜன்]
நீதித் துறை நியமனங்களில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலையிடுகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர்கள், சில வழக்கறிஞர்கள், சில அரசு சாரா அமைப்புகள் குற்றம் சாட்டுவது சுத்த அபத்தமானது; அடிப்படையற்றது என்று நாட்டின் பிரபல வழக்கறிஞர் ஆர்.சிவராசா கூறினார்.
நீதித் துறையில் நெருக்கடி என்று கூச்சலிடுபவர்கள் உண்மையான நெருக்கடியை பார்த்துள்ளனரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
1988 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது காலத்தில் நிகழ்ந்தது தான் உண்மையான, அசலான நெருக்கடி ஆகும்.
இன்று சத்தம்போடுபவர்களுக்கும் உண்மையான அரசியல் நெருக்கடிக்கு அர்த்தம் புரியாதவர்களுக்கும் 2007 ஆம் ஆண்டு நிகழ்ந்த இன்னொரு நீதித் துறை நெருக்கடியாவது தெரியுமா என்று சுங்கைபூலோ தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவராசா கேள்வி எழுப்பினார்.
அதேசமயம் நீதித் துறையில் அன்வார் தலையிடுகிறார், உயர் நீதிபதிகள் நியமனத்தில் காலம் தாழ்த்துகிறார் இப்போது கத்திக்கொண்டிருப்பவர்கள் அதற்கு ஆதாரங்களை காட்டியிருக்கின்றனரா?
ஆனால், அவர்கள் தொடர்ந்து அன்வாரை குறிவைத்து தாக்கிக்கொண்டிருக்கின்றனர்.
உண்மை நிலையில் இக்குற்சாட்டுகளில் அடிப்படையும் இல்லை உண்மையும் இல்லை. நீதிபதிகள் நியமன விவகாரத்தில் பிரதமர் தலையிட்டதில்லை. நீதிபதிகளை அழைத்துப் பேசியதும் இல்லை என்று சிவராசா கூறினார்.
நீதித் துறை உயர் பதவிகள், நீதிபதிகள் நியமனங்களில் மலாய் ஆட்சியாளர்களுக்கும் மாட்சிமை தங்கிய பேரரசருக்கும் ஆலோசனை வழங்கும் சட்டப்பூர்வ அதிகாரத்தை பிரதமர் அன்வார் பெற்றிருக்கிறார்.
நாட்டின் தலைமை நீதிபதி, அப்பீல் நீதிமன்ற நீதிபதி, நீதிபதிகள் நியமனங்கள் விவகாரம் தொடர்பில் சொல்லப்படும் விமர்சனங்கள், கருத்துக்கள் அனைத்தையும் பரிசீலிக்க வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் பிரதமருக்கு இருக்கிறது.
இருப்பினும் இன்று நிலைமை மாறுபட்டிருக்கிறது. இல்லாத ஒன்றுக்கு அரிதாரம் பூசி ஒரு சிலர் இன்று படம் காட்டிக்கொண்டிருக்கின்றனர் என்று சிவராசா தெரிவித்தார்.
இந்த நியமனங்களின் நடைமுறைகளை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இது குறித்து வெளிப்படையாகவே விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால் இதை எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள மறுப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது என்றார் அவர்.
எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே இவ்விகாரத்தை அவர்களின் அரசியல் ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும் இவ்விவகாரத்தில் அன்வார் அரசாங்கத்தின் தலையீடு இருக்கிறது என்பதற்கு அவர்கள் இதுவரை ஆதாரங்களையும் காட்டவில்லை; அப்படி ஏதும் இருப்பதாகவும் சொல்லவில்லை என்பதை சிவராசா மிகத் தெளிவாக சுட்டிக்காட்டினார்.
லத்திஃபா ஒருதலைப்பட்சமாக பேசக்கூடாது
Lawyers for Liberty இணை தோற்றுநரான வழக்கறிஞர் லத்திஃபா கோயா, இல்லாத நீதித் துறை நெருக்கடியை”Mother of All Judicial Scandals” என்று கூறியிருக்கிறார்.
அதேசமயத்தில் நீதிபதிகள் நியமனத்தில் பிரதமருக்கு உள்ள அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் பறிப்பதற்கு கூட்டரசு அமைப்புச் சட்டத்தில் உடனடி திருத்தம் செய்ய வேண்டும் அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இல்லாத ஒன்றுக்கு அமைப்புச் சட்டத்தில் திருத்தம் ஏன் என்று சிவராசா கேள்வி எழுப்பினார்.
இவ்விவகாரத்தில் லத்திஃபா ஒரு தலைப்பட்சமாக விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகிறார். ‘ஊழலுக்கு எல்லாம் தாய்’ என்று விமர்சிக்கிறார்.
நீதிபதிகள் நியமனங்களில் தம்முடைய தலையீடு அறவே இல்லை என்று பிரதமர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தாலும் லத்திஃபா அதனை காது கொடுத்து கேட்க மறுக்கிறார்.
அதற்கு பதிலாக மூன்றாம் தரப்புக்களின் பார்வைகளை லத்திஃபா பிரதிபலித்துக்கொண்டிருக்கிறார்.
எவ்வித முகாந்திரங்களும் இல்லாமல் இவ்விகாரத்தை அவர் விமர்சனம் செய்துக்கொண்டிருக்கிறார். நீதித் துறை நியமனங்கள் விவகாரத்தில் உண்மையிலேயே தலையீடு இருக்கிறது என்று லத்திஃபா நினத்தால் தகுந்த ஆதாரங்களுடன் அவர் அதனை நிரூபிக்க வேண்டும் என்று சிவராசா வலியுறுத்தினார்.
1988, 2007 ஆம் ஆண்டுகளில் தலையெடுத்த நீதித் துறை நியமனங்கள் நெருக்கடிதான் உண்மையானது என்பது லத்திஃபாவுக்கு தெரியாத அல்லது மறந்துவிட்டாரா?
கூட்டரசு அமைப்புச் சட்டம் விதி 122B கீழ் தலைமை நீதிபதி நியமனம் செய்யப்படுகிறார்.
பிரதமரின் ஆலோசனைக்கு பின்னர் மலாய் ஆட்சியாளர்களோடு கலந்தாய்வு நடத்தி மாட்சிமை தங்கிய பேரரசர் தலைமை நீதிபதியை நியமனம் செய்வார். இது தான் நடைமுறை.
இதில் அரசியல் தலையீடு ஏதும் இல்லை. கூட்டரசு அமைப்புச் சட்டத்தின் நடைமுறைகளை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று சிவராசா குறிப்பிட்டார்.





















