ஷா ஆலம்,
தலைநகரில் நேற்று நடைபெற்ற பேரணி அமைதியாகவும் ஒழுங்காகவும் நடந்ததற்கு ஆதரவளித்த அனைத்து அமலாக்க அதிகாரிகளுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதிப்படுத்தும் பணியில் காவல் துறையினர், தீயணைப்பு படையினர், மருத்துவக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் சிறந்த கட்டுப்பாடும் அர்ப்பண உணர்வும் காட்டியதாக அவர் பாராட்டினார்.
“தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும், ஒற்றுமையை உணரவும் வெளியூர்களிலிருந்து வந்த சகோதரர், சகோதரிகள் அனைவரும் பாதுகாப்பாக பயணம் செய்து தங்கள் வீடுகளை அடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் கருத்துகளையும் ஜனநாயக நடைமுறையின் ஓர் அங்கமாகப் பாராட்டிக் காக்க கடமைப்பட்டுள்ளோம் எனவும், இதைத் தாம் மதிப்புடன் அணுகுவதாகவும் அன்வார் உறுதிப்படுத்தினார்.
“விமர்சனங்கள் மற்றும் கருத்து வேற்றுமைகளை பகைமையாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, இவை ஒரு முதிர்ந்த, முற்போக்கான மற்றும் இறையாண்மை கொண்ட தேசத்தின் உயிர்நாடியாகக் கருதப்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
“நாம் நேசிக்கும் நாட்டின் உணர்வுக்கு ஏற்ப இத்தகைய பேரணிகள் அமைதியாகவும் கட்டுப்பாட்டுடனும் நடைபெறவேண்டும் என்பதே முக்கியம்,” என அவர் கூறினார்.























