தமக்கு எதிராக எனிலும், பேரணியை நடத்த அனுமதித்த அரசாங்கம்! இதுதான் உண்மையான ஜனநாயகம்! பாராட்டுகள் குவிகின்றன

ஷா ஆலம்,

தலைநகரில் நேற்று அமைதியாக நடைபெற்ற பேரணி, நாட்டில் ஜனநாயகத்தின் முதிர்ச்சியையும், கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை அனைத்து தரப்பினருக்கும் வழங்க மடாணி அரசாங்கம் காட்டும் உறுதியையும் வெளிப்படுத்துகிறது.

பாஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி எந்தவித அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படக் கூடாது என கேஅடிலான் தகவல் தொடர்பு இயக்குநர் ஆடாம் அட்லி தெரிவித்தார்.

“இது முந்தைய இரும்புப் பிடி கொண்ட அரசுகளுடன் ஒப்பிடும்போது, தற்போது மலேசிய அரசியல் கலாசாரம் எவ்வாறு வெளிப்படையானதொரு போக்கை நோக்கி நகர்கிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு,” என அவர் கூறினார்.

மக்களின் குரல் ஒடுக்கப்பட்ட, கருத்து வேறுபாடுகள் குற்றமாகக் கருதப்பட்ட, பேரணிகளில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்ட நாட்கள் மலேசியாவின் கடந்த காலத்தில் சேர்ந்துவிட்டன. இன்று, மடாணி யுகத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தங்கள் கருத்துகளை அமைதியாக வெளியிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

“இது ஒரு பலவீனமான அரசாங்கத்தின் அறிகுறியாக அல்ல, மாறாக உண்மையான ஜனநாயகத்தின் சக்தியாகவே பார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளுக்கேற்ப, கருத்து வெளியிடும் மற்றும் ஒன்றுகூடும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. இதையே ஒரு கலாசாரமாக மாற்றும் நோக்கத்தில், மடாணி அரசாங்கம் ஒரு சமநிலையான ஜனநாயக சூழலை உருவாக்கியுள்ளது என அவர் மேலும் கூறினார்.

பேரணியுடன் தொடர்புடைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட நேர்மறையான கருத்து, அரசாங்கம் ஆணவத்தின் அடிப்படையில் அல்லாது, மக்களின் குரலுக்கு செவிகொடுக்கும் முனைப்பைக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here