மாரான்,
2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் இன்றுவரை நாடு முழுவதும் உள்ள பள்ளி வளாகங்களில் ஏற்பட்ட தீவிபத்துகள் தொடர்பில் 76 புகார்களை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பதிவு செய்துள்ளது.
இந்த தீவிபத்துகளில் சுமார் 60 விழுக்காடு மின்கோளாறுகள் காரணமாக ஏற்பட்டவை எனத் தெரிவித்த தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது, வயரிங் முறைகள், மின்சாதனங்களின் தவறான பயன்பாடு மற்றும் மின் அழுத்தம் ஆகியவை தீவிபத்துகளுக்கான முக்கிய காரணிகள் எனக் கூறினார்.
“விபத்துகள் ஏற்பட்ட இடங்களை வகுப்பறை, பரிசோதனைக்கூடம் அல்லது கிடங்கு என வகைப்படுத்தவில்லை. ‘பள்ளி வளாகம்’ என பொதுவாக மட்டுமே புள்ளிவிவரமாக எடுத்துள்ளோம்,” எனத் தெரிவித்தார் அவர்.
இங்கு கிழக்கு பிராந்தியத்தின் தீயணைப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்ற 2025 தேசிய தீயணைப்பு பயிற்சித் திட்டம் நிறைவுபெற்றதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்விவரங்களை வெளியிட்டார்.
மேலும், சரவாக் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக கனரக வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதையும், தீ பரவலைத் தடுக்க ‘தடுப்புக்கோடுகள்’ அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போது நிலவும் வெப்ப வானிலையால் காட்டுத்தீ விரைவில் கரிமண் பகுதிகளுக்கும் பரவலாம் எனக் கவலையுள்ளதாக தெரிவித்த நோர் ஹிஷாம், இது தொடர்பாக விரிவான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றும் குறிப்பிட்டார்.





















