13MP: முன்பள்ளி முதல் மேல்நிலை கல்வி வரை முழுமையான மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்துப்படும்

புத்ரஜெயா,

மலேசியா 13வது திட்டத்தின் (13MP) கீழ், நாட்டின் கல்வித் துறையை வலுப்படுத்த முன்பள்ளி முதல் மேல்நிலை கல்வி வரை முழுமையான கவனத்தை செலுத்த இருப்பதாக கல்வி அமைச்சர் பட்லினா சிடிக் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் RM67 பில்லியனை கல்வித் துறைக்காக ஒதுக்கியுள்ளதுடன், புதிய பள்ளிகள் கட்டுவதும், பழைய கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் முக்கிய பகுதிகளாக உள்ளன.

மேல்நிலை கல்வியை கட்டாயமாக்கும் கல்வி சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், 5 வயதில் இருந்து முன்பள்ளி கல்வியும் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், சிறுவர்கள் சிறந்த மற்றும் முழுமையான கல்விக் களத்துடன் வளர்வதற்கான அடித்தளத்தை அமைக்க முடியும் எனக் கூறப்பட்டது.

மேலும், மக்கள் அடர்த்தியுள்ள பகுதிகளில் பள்ளிகள் நெருக்கமாக இருப்பதை தீர்க்க, அடுக்கு மாடி பள்ளி கட்டடங்கள் விரிவாக்கப்படும். புதிய வீட்டு திட்டங்களில் பள்ளிகள் கட்டுதல் கட்டாயமாக்கப்படும்.

மலாய் மற்றும் ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்துவதற்கும், STEM, தொழில்நுட்ப மற்றும் தொழில்நெறி கல்வி (TVET), டிஜிட்டல் கல்வி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட துறைகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

அதனுடன், ஆசிரியர்களின் தேர்வு, பயிற்சி மற்றும் சேவையில் உள்ளோரின் திறன் மேம்பாட்டுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

“13வது மலேசியா திட்டம், நாட்டு குழந்தைகளுக்காக பலவீனங்களை நீக்கி புதிய மாற்றங்களை கொண்டு வர மலேசியா மதானி அரசாங்கத்தின் தீர்மானமான முயற்சியாகும்,” என கல்வி அமைச்சர் கூறினார்.

மேலும், இந்த திட்டத்தை முன்வைத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கல்வி அமைச்சகம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here