மலேசியாவில் ஆயுதக் கடத்தல் கும்பல் முறியடிப்பு – மூத்த இராணுவ அதிகாரிகள் உள்பட 10 பேர் கைது

கோலாலம்பூர்:
நாட்டின் தென்பகுதியில் செயல்பட்ட ஒரு பேரளவிலான ஆயுதக் கடத்தல் கும்பலை
மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (MACC) வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

இந்தக் கும்பல், மூத்த இராணுவ அதிகாரிகளின் தலைமையில் செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு ‘ஓப்ஸ் சோஹோர்’ எனும் சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு, கிள்ளான் பள்ளத்தாக்கில் ஐந்து மூத்த இராணுவ அதிகாரிகளையும், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவரை உள்ளடக்கிய ஐந்து பொதுமக்களையும் கைது செய்தது. 30 முதல் 55 வயதுக்குட்பட்ட இவர்கள் நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 13) காலை 6.30 மணியளவில் சிக்கினர்.

கைதான இராணுவ அதிகாரிகளில் இருவர் புலனாய்வுப் பிரிவில் இருந்து ஓய்வுபெற்றவர்கள். அவர்கள் கடத்தலைத் தடுக்கும் பொறுப்பில் இருந்த போதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டு, சட்டவிரோதமாக 3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேலான தொகையைப் பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஆரம்பக்கட்ட விசாரணையில், இந்த அதிகாரிகள் இராணுவச் செயல்பாட்டு தகவல்களை கடத்தல்காரர்களிடம் கசியவிட்டு, அண்டை நாடுகளிலிருந்து போதைப்பொருள், சிகரெட்டுகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வரச் செய்தது தெரியவந்தது.

ஒரு மாதத்தில் இந்தக் கடத்தல் செயல்பாடுகள் மூலம் சுமார் 5 மில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்டப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் ஒவ்வொரு கடத்தலுக்கும் 30,000 முதல் 50,000 ரிங்கிட் வரை கையூட்டு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனையில் 63,000 ரிங்கிட் ரொக்கம், பல பொட்டலங்களில் போதைப்பொருள், எடையை அளவிடும் கருவிகள், மதுபானங்கள், போலித் துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அனைத்து சந்தேக நபர்களும் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) புத்ராஜெயா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here