சிரம்பான்:
செனாவாங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒருவரை குத்திக் கொன்றதாக, இன்று ஒரு சமையல்காரருக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட பிறகும், 31 வயதான சுலாஸ்ரென் சகாரியாவிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவுசெய்யப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி மாலை 6.50 மணியளவில், தாமான் ஸ்ரீ பாகி, செனாவாங் பகுதியில் உள்ள வீட்டில் முகமட் அமிருல் ரஷீத் முகமது நிசா (28) என்பவரை மார்பில் குத்திக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தண்டனைச் சட்டம் 302வது பிரிவின் கீழ் சாட்டப்பட்ட இந்த குற்றச்சாட்டிற்கு மரணதண்டனை அல்லது குறைந்தது 30 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். மரண தண்டனை விதிக்கப்படாத நிலை ஏற்பட்டால் குறைந்தது 12 பிரம்படி தண்டனையும் சேர்த்து வழங்கப்படும்.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்படவில்லை, மேலும் அக்டோபர் 17ஆம் தேதி வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் ஒத்திவைத்தது .
அரசு தரப்பில் துணை பொதுச் சாட்டு வக்கீல் நிக் நூர் அகிலா சயர்ஃபா நிக் ஸைதி ஆஜராக, குற்றம் சாட்டப்பட்ட சுலாஸ்ரென் தரப்பில் யாரும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.




















