அரச நிதிகளை தவறாக பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, நீதிமன்ற உத்தரவின்படி நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பின் மிகப்பெரும் சிறையான வெலிக்கடைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் உள்ள சில பிரச்சினைகள் காரணமாக அவர் சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.
76 வயதான ரணில் விக்ரமசிங்க மீது ”அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல்” மற்றும் “உயர பொறுப்பில் இருக்கும்போது நம்பிக்கையை பாதுகாக்க தவறினார் ” ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் லண்டனில் தனது மனைவியின் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொள்ள தவறாக அரசு நிதியை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுமார் 16.6 மில்லியன் இலங்கை ரூபா அரசு நிதி, தனிப்பட்ட பயணத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக இலங்கை குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. எனினும், எந்த தவறும் செய்யவில்லை என்றும் மனைவியின் செலவுகளை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டதாகவும் விக்ரமசிங்க தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார்.



















