மலேசியாவிற்கு வருகை தந்த புருணை சுல்தானுக்கு அரச வரவேற்பு!

கோலாலம்பூர்: புருணை சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியா (Sultan Hassanal Bolkiah), நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று மலேசியாவிற்கு வருகை தந்துள்ளார். அவருக்கு, இஸ்தானா நெகாராவில் (Istana Negara) அரச வரவேற்பு அளிக்கப்பட்டது.

புருணை இளவரசர் அப்துல் மதீனுடன் (Prince ‘Abdul Mateen) வருகை தந்த சுல்தானை, மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் (Sultan Ibrahim) வரவேற்றார்.

அதுமட்டுமின்றி, அரச மரியாதையாக, 21 குண்டுகள் முழங்க, அவருக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர், இரு மன்னர்களும் இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர், இதனை தொடர்ந்து, அரச விருந்து நடைபெற்றது.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பதவி ஏற்ற பிறகு, அவர் ஏற்று நடத்தும் மூன்றாவது அரசப் பயணம் இதுவாகும். இதற்கு முன்பு, சீன, இந்தோனேசிய அதிபர்கள் மலேசியாவிற்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே,
புருணை சுல்தான் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன், 26-வது மலேசியா-புருணை வருடாந்திரத் தலைவர்கள் சந்திப்பில் (ALC) கலந்துகொள்வார்.

இந்தச் சந்திப்பு, இரு நாடுகளின் ஒத்துழைப்பு பிராந்திய விவகாரங்களை மதிப்பாய்வு செய்வதற்கான ஒரு உயர்மட்டக் களமாக அமைந்துள்ளது.

மலேசியா-புருணை இடையிலான வர்த்தகம், 2024-இல் RM7.53 பில்லியனாகவும், 2025-இன் முதல் ஆறு மாதங்களில் RM3.02 பில்லியனாகவும் பதிவாகியுள்ளது.

எனவேதான் புருணை சுல்தானின் இந்த வருகை, இரு நாடுகளின் நெருங்கிய உறவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here