கோலாலம்பூர்:
உரிய உரிமம் இன்றி சமையல் எண்ணெயை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐந்து மியன்மார் நாட்டு நபர்கள் மற்றும் ஒரு மலேசியர் ஆகியோர் மீது இன்று (ஆகஸ்ட் 27) சிலாயாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வொங் ஷு சி மற்றும் மியன்மார் நாட்டு நபர்களான ஐ மின் து, அவுங் கோ கோ, ஹ்டெட் அவுங், ஹ்டெட் நாங் மற்றும் தான் சோ அவுங் ஆகியோராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வொங் குற்றச்சாட்டை மறுத்து நீதிமன்றத்தில் தான் குற்றமற்றவர் என வாதித்தார். ஆனால், ஏனைய ஐந்து வெளிநாட்டினரும் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அவர்களிடமிருந்து எந்த பதிலும் பதிவாகவில்லை.
இந்த வழக்கில் அனைவரும் சேர்ந்து 11,883 கிலோ கிராம் எடையிலான கட்டுப்பாட்டில் உள்ள சமையல் எண்ணெயை சந்தேகத்திற்கிடமான முறையில் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை 11.30 மணியளவில் ரவாங் பகுதியிலுள்ள Nautical Industrial Park வளாகத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
இவ்வழக்கு 1974 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பொருள் வழங்கல் கட்டுப்பாட்டு விதிகள் 3(1) பிரிவின் கீழும், 1961 ஆம் ஆண்டு பொருள் வழங்கல் கட்டுப்பாட்டு சட்டத்தின் பிரிவு 21-ன் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றத்திற்கு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM10 லட்சம் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிந்தால் அதிகபட்சமாக RM30 லட்சம் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
நீதிமன்றம் வொங்-க்கு RM10,000 ஜாமீனை வழங்கி, வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அதேநேரம் வெளிநாட்டவர்கள் ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமனம் செய்யுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.





















