கோலாலம்பூர்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜோகூர், செகாமட்டில் ஏற்பட்ட 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், இந்தச் சம்பவம், அப்பகுதியில் உள்ள காப்பி கடைகளில் வழக்கத்திற்கு மாறான கூட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என Sin Chew Daily செய்தி வெளியிட்டுள்ளது.
தாங்கள் உணர்ந்த நிலநடுக்க அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, பொதுமக்கள் அதிகாலையிலேயே இந்தக் கடைகளுக்கு வரத் தொடங்கினர்.
இது குறித்து, டிம் சம் (dim sum) உணவக உரிமையாளர், ஹுவாங் ஷி கை (Huang Zhi Kai) கூறகையில், தனது கடை வழக்கத்தை விட ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே நிரம்பிவிட்டதாகவும், வியாபாரம் 25% அதிகரித்ததாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, மற்றொரு காப்பி கடை உரிமையாளர், லின் யூ யோங் (Lin You Yong), தனது கடை காலை 7.30 மணியளவில் நிரம்பிவிட்டதாகவும் கூறினார்.
இதனை அடுத்து, ஹுவாங் ஷி கை, நிலநடுக்கத்தின்போது, பெரிய சத்தம் கேட்டதாகவும், பின்னர் வெளியே சென்று பார்த்தபோது, யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.




















