கோலாலம்பூர்:
வரும் செப்டம்பர் 1 முதல், மின்சிகரெட் (E-Cigarette) தொடர்பான குற்றங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்படவுள்ளன என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில், ஆண்டுதோறும் சராசரியாக 3,100 மாணவர்கள் மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காகப் பிடிபட்டுள்ளனர். இவர்களில் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மற்றும் மில்லெனியா கல்வி நிலையங்களின் மாணவர்கள் அடங்குவர்.
இந்த எண்ணிக்கை அதிகரித்ததற்கான முக்கிய காரணமாக அமலாக்க நடவடிக்கைகளின் தீவிரப்படுத்தல் தான் என கல்வி அமைச்சக பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில், தொழில்நுட்பக் கல்விக் கழகம், ஐந்து பலதுறை தொழிற்கல்லூரிகள் மற்றும் ஆறு தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 800 மாணவர்கள் மின்சிகரெட் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் பதிவுகள் கூறுகின்றன. 2020-ம் ஆண்டுக்கு முன்பு, பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் வருடத்திற்கு 50க்கும் குறைவான சம்பவங்களே இருந்தன.
தேசிய அளவில் மின்சிகரெட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட உள்ளன.
“பள்ளிகள் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். குற்றமிழைத்த மாணவர்களின் நடத்தைத் தரத்தில் மாற்றங்கள் செய்யப்படும். அதேசமயம், கற்பித்தல் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்,” என கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வியாழக்கிழமை (ஆக. 28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.





















