தவறான புரிதல்களுக்கு இடமில்லை, அனைவரும் பயன்பெறுவர் – ரமணன்

கோலாலம்பூர்:

நகர்ப்புற புதுப்பித்தல் சட்ட மசோதா (Urban Renewal Bill) இந்திய சமூகத்திற்கோ அல்லது பிற சிறுபான்மையினருக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்று துணை தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் உறுதியளித்துள்ளார்.

மசோதா குறித்து சமூகத்தில் பரவியுள்ள சில தவறான புரிதல்கள் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ஆனால், அரசு எந்த சமூகத்தையும் புறக்கணிக்காமல், மக்கள் அனைவரின் உரிமைகளையும் முழுமையாகக் காக்கும் வகையில் கவனமாக செயல்படுகிறது.

“இந்த மசோதா எவருடைய நிலத்தையும் வீடுகளையும் பறிப்பதற்கான கருவி அல்ல. மாறாக, நகர்ப்புற பகுதிகளில் பழுதடைந்த கட்டிடங்கள், போதிய வசதிகள் இல்லாத குடியிருப்புகள், போக்குவரத்து நெரிசல், வடிகால் மற்றும் கழிவுநீர் பிரச்சினைகள் போன்றவற்றைத் தீர்க்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இதன் குறிக்கோள்,” என்று ரமணன் வலியுறுத்தினார்.

மேலும், அரசு நகர்ப்புற புதுப்பித்தல் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது வெளிப்படைத்தன்மையும் பொறுப்புத் தன்மையும் உறுதி செய்யும் என்றும், ஒவ்வொரு சமூகத்தினரும் இதில் பயனடைவர் என்றும் அவர் தெரிவித்தார்.

“மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் அனைத்து தரப்புகளின் கருத்துகளும் பெறப்படும். சமூகத் தலைவர்கள், உள்ளூர் பிரதிநிதிகள், அரசு அல்லாத அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் உரையாடல்கள் நடத்தப்படும். எந்தக் குழுவும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்,” என்று அவர் கூறினார்.

ரமணன் மேலும், இந்திய சமூகத்தினர் குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் குடும்பங்கள், இந்த மசோதாவால் பயன்பெறும் நிலையில் இருப்பார்கள் என்றும், வசதியான வீடுகள், மேம்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பான வாழ்விடம் என்பன உறுதியாக கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

“டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் சமமாக வளரும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த மசோதாவும் அதற்கான ஒரு உதாரணமே,” என்று அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here