இந்தோனேசியாவில் உள்ள மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டும்: மலேசியத் தூதரகம் அறிவுரை!

கோலாலம்பூர்:

இந்தோனேசியாவின் ஜாகர்த்தா மேலும் பிற நகரங்களில், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல், தொடர்ந்து கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், அங்கு வசிக்கும் மலேசியர்கள், விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும், இந்தோனேசியாவிற்கான மலேசியத் தூதர் டத்தோ சைட் முகமட் ஹஸ்ரின் தெங்கு ஹுசின் (Datuk Syed Mohamad Hasrin Tengku Hussin) அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தக் கலவரங்களால், எந்த மலேசியருக்கும், குறிப்பாக மாணவர்களுக்கும், எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் உறுதிப்படுத்தினார்.

அதுமட்டுமின்றி மலேசிய கல்வி அமைச்சு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, மலேசியர்கள், கலவரம் ஏற்பட்ட இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், தங்கள் பயணத்தை கவனமாகத் திட்டமிட வேண்டும் என்றும், போதுமான நிதி, காப்பீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், உள்ளூர் நிலவரங்களை அறிந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதற்கிடையில், மலேசியத் தூதரகம், தொலைபேசி, மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம், தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறது,

அதுமட்டுமின்றி நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தேவைப்பட்டால், அறிக்கைகளை வெளியிடுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here