கோலாலம்பூர்:
மலேசியாவில், வெளிநாட்டினர், உள்ளூர் மக்களைத் திருமணம் செய்து, சட்டபூர்வமாக வணிகங்களை நடத்துவதாக, உள்நாட்டு வர்த்தகம் வாழ்க்கைச் செலவினத்துறை துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே (Datuk Dr Fuziah Salleh), நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
1956-ஆம் ஆண்டு வணிகப் பதிவுச் சட்டத்தின் கீழ், மலேசியர்கள், நிரந்தர தங்கும் உரிமை உள்ளவர்கள் மட்டுமே, வணிகங்களைப் பதிவு செய்ய முடியும்.
ஆனால், பலர், தங்கள் உள்ளூர் துணைவர்களின் பெயரில் பதிவு செய்து, இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று அவர் விளக்கினார்.
இந்த வணிகப் பதிவுகள் சட்டபூர்வமாக இருந்தாலும், உள்ளூர் வணிகர்கள், இந்த நடைமுறையால் அச்சுறுத்தப்படுவதாக அவர் கூறினார். வெளிநாட்டுத் துணைவர்கள், திருமணம் முடிந்த பிறகு, ஐந்து ஆண்டுகள் காத்திருப்பு காலத்திற்குப் பிறகுதான், வணிகங்களைப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
மேலும், தனது அமைச்சுக்குக் கைது செய்யும் அதிகாரம் இல்லாததால், வெளிநாட்டு வர்த்தகர்கள் மீது, குடிநுழைவுத் துறை, உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து, நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.





















