2015க்கு முன் வந்த இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கலாம் – மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி:

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதிக்கு முன் இந்தியாவிற்கு வந்து, இந்திய அரசிடம் சட்டபூர்வமாக அனுமதி பெற்றிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள், செல்லுபடியாகும் கடப்பிதழ், பயண ஆவணங்கள் அல்லது விசா இல்லாமல் இருப்பினும் தண்டனை விதிக்கப்படமாட்டாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட குடிநுழைவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025, கடப்பிதழ் அல்லது செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினர் நுழைவதையும் தங்குவதையும் தண்டனைக்குரிய குற்றமாக வகைப்படுத்துகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ரூ. 5 லட்சம் வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆனால், இந்தச் சட்டத்திலிருந்து 2015 ஜனவரி 9க்கு முன்னர் வந்த இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

முன்னதாகவும், இந்தியாவில் தஞ்சம் புகுந்து பின்னர் தாமாக முன்வந்து இலங்கை திரும்ப விரும்பிய அகதிகளுக்கு, விசா கட்டணத்தையும், விசா இன்றி நீண்டகாலம் தங்கியிருந்ததற்கான அபராதத்தையும் மத்திய உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்திருந்தது.

மேலும், செப்டம்பர் 2ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட மற்றொரு உத்தரவில், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலினால் தப்பி, 2024 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியா வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகத்தினருக்கும், செல்லுபடியாகும் கடப்பிதழ் அல்லது பயண ஆவணங்கள் இல்லாவிட்டாலும் இந்தியாவில் தங்க அனுமதி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய குடிநுழைவு சட்டத்தின் கீழ், நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளிலிருந்து நிலம் அல்லது வான்வழியாக இந்தியா வரும் மக்களுக்கும், இந்தியக் குடிமக்களுக்கும் செப்டம்பர் 1 முதல் கடப்பிதழ் அல்லது விசா தேவையில்லை. ஆனால், சீனா, ஹாங்காங், பாகிஸ்தான் வழியாக வரும் நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here