3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி ஈவுஇரக்கமின்றி எரித்துக்கொன்ற கொடூர தந்தை.. காரணம் என்ன..?

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் எர்ரகொண்ட பாளையம் மண்டலம் பெத்தபொயபள்ளியைச் சேர்ந்தவர் புத்தா வெங்கடேஸ்வர் (வயது 36). இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு மோக்சிதா (8), ரகுவர்ஷினி (6) என 2 மகள்களும், சிவதர்மா (4) என்ற ஒரு மகனும் உள்ளனர். இதற்கிடையே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த புத்தா வெங்கடேஸ்வர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். தான் இறந்தால் குழந்தைகள் சிரமப்படுவார்கள் என்று நினைத்த அவர், தனது குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

வழக்கம்போல் குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டனர். மாலையில் பள்ளி முடிந்ததும், 3 குழந்தைகளையும் மோட்டார் சைக்கிளில் புத்தா வெங்கடேஸ்வர், தெலுங்கானாவில் உள்ள நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டை மண்டலம் ஹாஜிபூர் என்ற இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து 3 குழந்தைகள் மீதும் ஈவுஇரக்கமின்றி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் 3 பேரும் தீயில் எரிந்து பரிதாபமாக இறந்தனர்.

பின்னர் புத்தா வெங்கடேஸ்வர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கணவனும், குழந்தைகளும் வீடு திரும்பாததை அறிந்த தீபிகா பல இடங்களில் தேடினார். ஆனால் அவர்கள் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் 3 குழந்தைகளையும் கொலை செய்து அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் மூலமாக 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. குழந்தைகள், கணவரின் உடல்களை பார்த்து தீபிகா மற்றும் உறவினர்கள் கதறிஅழுதது பரிதாபமாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here