கிளந்தானில் மாடு திருடும் கும்பல் முறியடிப்பு: RM96,000 மதிப்பிலான 32 மாடுகள் மீட்பு; 10 பேர் கைது!

கோலாலம்பூர்:

கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த மாடு திருடும் கும்பலை அதிரடியாக முறியடித்துள்ள காவல் துறை, 2 பெண்களுள்பட 10 பேரைக் கைது செய்து, திருடப்பட்ட RM96,000 மதிப்பிலான 32 மாடுகளை மீட்டுள்ளது.

கடந்த ஜூன் 17 முதல் ஆகஸ்ட் 5 வரை பாச்சோக், பாசீர் பூத்தே மற்றும் கோலா திரெங்கானு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கிளந்தான் மாநிலக் காவல் துறைத் தலைவர் டேத்தோ முகமட் யூசோஃப் மாமட் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் 23 முதல் 71 வயதுக்குட்பட்ட 8 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக்கும்பலிடமிருந்து 8 கைபேசிகள், மாடுகளுக்கு மயக்க மருந்து செலுத்தப் பயன்படுத்தப்பட்ட ‘Illium Xylazil-100’ பாட்டில் மற்றும் ஊசி (Syringe), அத்துடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ‘Toyota Hilux’ மற்றும் ‘Perodua Kancil’ வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான 10 நபர்கள் மீதும் மொத்தமாக 55 குற்றவியல் வழக்குகளும், 24 போதைப்பொருள் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும், பரிசோதனையில் ஒருவருக்கு போதைப்பொருள் (Methamphetamine) பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கைதின் மூலம் கேலந்தான் மாநிலத்தில் பதிவான 20 மாடு திருட்டு வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.

தற்போது சந்தேக நபர்கள் அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டம் பிரிவு 379 (திருட்டு) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here