கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் அவரது முன்னாள் அரசியல் செயலாளர் டத்தோ முஹமட் அனுவார் முஹமட் யூனுஸ் ஆகியோருக்கு சொந்தமானது என நம்பப்படும் RM169 மில்லியன் தொகையை பறிமுதல் செய்வதற்கான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) விண்ணப்பத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பவில்லை என்று இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுசானா ஹுசின் முன் நடைபெற்ற விசாரணையின் போது, எம்ஏசிசி துணை அரசு வழக்கறிஞர் மஹாடி அப்துல் ஜுமாத் இந்த தகவலை அறிவித்தார்.
அவரது விளக்கத்தில், பிரதிவாதிகள் இருவரும் தங்கள் வழக்கறிஞர்களின் மூலம் ஆகஸ்ட் 28 தேதியிட்ட கடிதம் ஒன்றை நீதிமன்றத்திற்கு அனுப்பி, பறிமுதல் தொடர்பான அரசுத் தரப்பு விண்ணப்பத்தை வினா எழுப்ப விரும்பவில்லை என்ற தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்ததாக கூறினார்.
“இந்த விண்ணப்பத்திற்காக எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 41(2) கீழ் மூன்றாம் தரப்பு வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும் என்று கோருகிறோம். மேலும், செயல்முறையை விரைவுபடுத்த முயற்சிக்கின்றோம்,” என மஹாடி தெரிவித்தார்.





















