கோத்தா கினபாலு,
கடந்த வெள்ளிக்கிழமை முதல் சபாவில் ஏற்பட்டுவரும் நிலச்சரிவு பேரழிவில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஐந்து சிறுவர் அடங்குவர். நேற்று மட்டும் 11 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
நேற்று காலை 9.15 மணியளவில் இனானம், கொலொம்போங் பகுதியிலுள்ள காம்புங் செந்தேரகாசிஹ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நால்வர் குழந்தைகள் உட்பட ஏழு பேர் புதைக்கப்பட்டு உயிரிழந்ததாக கோத்தா கினபாலு, மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. காசிம் முஸ்தா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுவர்கள் வயது இரண்டு முதல் ஒன்பது வரை மூன்று ஆண்கள், ஒரு பெண் குழந்தை எனவும், மற்ற மூவர் வயது 25 முதல் 50 வரை உள்ள இரு பெண்கள் மற்றும் ஒருவரான ஆண் எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், பாபார் பகுதியில் உள்ள காம்புங் மூக் பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 38 வயது பெண் மற்றும் 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக சபா தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குநர் மொஹமட் பிசார் அசிஸ் உறுதிப்படுத்தினார்.
இதேபோல், செபாங்கர் பகுதியில் உள்ள காம்புங் லோக் போனு பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் வீடு ஒன்று இடிந்து புதையுண்ட 53 வயது பெண் உயிரிழந்தார். அவரது 25 வயது மகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.





















