திருநெல்வேலி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் உரையாற்றுவதாக தமிழகச் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“முதல்வர், பிரதமர் போன்ற உயர்ந்த பதவியாளர்களை குறித்துப் பேசும்போது கண்ணியமாக பேச வேண்டும். ஆனால் விஜய் பின்புலத்தில் அமித் ஷா மற்றும் பாஜக இருக்கிற துணிச்சலில் அகந்தையோடு பேசுகிறார்,” என்றார்.
அவர் மேலும்,
“மத்திய அரசே சிலரைப் புதுக் கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு சவால் விடுகிறது. விஜய் சினிமா வசன பாணியில் பேசி வருகிறார். இத்தகைய அகந்தை அரசியலில் இருக்கக் கூடாது,” எனக் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு விவகாரம் குறித்தும் அவர் பதிலளித்தார்:
“ஒய்-கேட்டகிரி பாதுகாப்பு கேட்காமலே விஜய்க்கு வழங்கியதாகக் கூறுகிறார்கள். நான் பிரசாரத்திற்கு வரும்போது ஏராளமான நிபந்தனைகள் விதிக்கிறீர்கள். பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் பிரசாரத்திற்கு வந்தால் இப்படி செய்வீர்களா? முதல்வரிடம் இதே போன்று நடைமுறைப்படுத்திப் பாருங்கள். விஜய் சொன்னதிலிருந்து அவருக்கு பின்னணியில் யார் இயக்குகிறார்கள் என்பது தெளிவாகிறது,” என்றார்.
விஜயின் அரசியல் அறிவைப் பற்றி கருத்து தெரிவித்த அப்பாவு,
“விஜய்க்கு அரசியலில் அடிப்படை அறிவே இல்லை என்று நினைக்கிறேன். அவர் சிறுவயது போன்று பேசுகிறார். இது மக்களுக்கு பிடிக்காது,” என்று வலியுறுத்தினார்.
























