கோலாலம்பூர்:
தலைநகரின் பிரபல வணிகப் பகுதியான லோராங் ஹாஜி தாயிப் (Lorong Haji Taib) பகுதியில் கடைகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வணிகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 38 வெளிநாட்டினர்களை கைது செய்துள்ளதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் வான் முகம்மது சவ்பி வான் யூசுப் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், நேற்று நண்பகலில் நடைபெற்ற முதல் சோதனையில் 27 வெளிநாட்டினர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு, அவர்களில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். “சோதனை நடந்தபோது சிலர் தப்பிச் சென்றனர்,” எனவும் அவர் கூறினார்.
தப்பிச் சென்றவர்கள் பின்னர் அதே இரவு மீண்டும் அந்தப் பகுதிக்கு வந்து வணிகத்தைத் தொடர்ந்ததாக உள்ளூர் வியாபாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில், இரவு 11 மணியளவில் இரண்டாவது சோதனை மேற்கொள்ளப்பட்டது. “அந்த சோதனையில் 25 வெளிநாட்டினர்களும், அவர்களை பாதுகாத்து வந்த ஒரு உள்ளூர்வாசியும் கைது செய்யப்பட்டனர்,” என்று வான் முகம்மது சவ்பி தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.





















