சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளி கழிப்பறையில் மயங்கி கிடந்த 4ஆம் ஆண்டு மாணவன் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
குறித்த 10 வயது சிறுவன் உடனடியாக பள்ளியின் ஆசிரியர் மூலம் சிரம்பானில் உள்ள தனியார் மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவரை உயிரிழந்ததாக அறிவித்தார்.
“இந்த சம்பவம் தொடர்பான புகார் நேற்று மதியம் 1.19 மணிக்கு கிடைத்தது. சிறுவன் பள்ளி கழிப்பறையில் மயங்கி கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்,” என்று, நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சஃப்னி அமாட் கூறினார்.
சிறுவனின் மரணத்துக்கான சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள இன்று ரெம்பாவ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த வழக்கு தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 507Cன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எந்தவிதமான ஊகக் கருத்துக்களையும் பரப்பாமல், உறுதி செய்யப்படாத தகவல்களை பகிர்வதைத் தவிர்க்கும்படி போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.



















