கோலாலம்பூர்:
ஜோகூரில் வெள்ளநிலை மோசமடைந்து இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பேராக் மற்றும் கெடாவில் குறைவடைந்துள்ளதாக இன்று மதியம் தகவல் வெளியாகியுள்ளது.
ஜோகூரின், பொந்தியான் மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை இன்று மாலை 4 மணி நிலவரப்படி, 46 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேராக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை காலை 11 மணி நிலவரப்படி 33 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேர் மட்டுமே பதிவாகியிருந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்ட Sekolah Kebangsaan Melayu Raya தற்காலிக நிவாரண மையத்தில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, மாநில பேரிடர் மேலாண்மை குழு (JPBN) தலைவர் டத்தோக் அஸ்மான் ஷா அப்த் ரஹ்மான் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட கிராமங்களில் கம்போங் மலாய் ராயா, கம்போங் பயா எம்புன், கம்போங் பாக் கலிப், கம்போங் ஸ்ரீ மேனாந்தி, கம்போங் மாஜு ஜெயா ஆகியவை அடங்கும்.
அதேநேரம் பேராகில், லாருட், மாதாங் மற்றும் ஸெலாமா மாவட்டங்களில் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை காலை 8 மணி நிலவரப்படி 68 குடும்பங்களை சேர்ந்த 210 பேராக இருந்த நிலையில், மாலை 4 மணிக்கு 52 குடும்பங்களில் இருந்து 170 பேராகக் குறைந்துள்ளது.
அதுபோல தைப்பிங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள நான்கு PPS-களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக JPBN செயல்முறைத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.





















