கோலாலம்பூர்:
புக்கிட் ஜலீல் ஆக்சியாட்டா அரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ள காசா ஒற்றுமை பேரணியை சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் போலீசார் செய்துவருகினறனர்.
இந்நிகழ்விற்காக ஓப்ஸ் லகார் பெர்டானா நடவடிக்கையின் கீழ், செராஸ் காவல் துறையிலிருந்து 6 மூத்த அதிகாரிகள் மற்றும் 120 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர், மேலும் வெளிப்புற போலீஸ் பிரிவிலிருந்து 2 மூத்த அதிகாரிகள் மற்றும் 12 பணியாளர்கள் என, மொத்தம் 140 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
பேரணியில் பங்கேற்பாளர்கள் சுமூகமாக நுழையவும் வெளியேறவும், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் புக்கிட் ஜலீல் பகுதியில் கடுமையாக பின்பற்றப்படும் என்று, செராஸ் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏ.சி.பி. ஐடில் போல்ஹாசன் தெரிவித்தார்.
நிகழ்வுக்குள் மலேசிய மற்றும் பாலஸ்தீனக் கொடிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்; அதோடு பதாகைகள், பேனர்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று ஏ.சி.பி. ஐடில் தெரிவித்தார்.
பேரணியில் 10,000 முதல் 12,000 பேர் வரை பங்கேற்பார்கள் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
























