சென்னை:
கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நடிகர் விஜய் தத்தெடுத்து, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவார் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த துயரச்சம்பவம், நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு சோகமான அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, கரூர் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
“விபத்துக்குப் பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க முயன்றபோது,
‘கலவரம் ஏற்படும்’ என்ற காரணத்தைக் கூறி, காவல்துறை கரூருக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
இதனால் எங்கள் கட்சி உறுப்பினர்கள் மாவட்ட எல்லையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தவெக அமைப்பை பலவீனப்படுத்தும் சதி நடந்து கொண்டிருப்பதாகவும்,
மாவட்டச் செயலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களை மௌனப்படுத்த முயற்சி நடைபெறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
“கரூர் நெரிசலுக்குத் தவெகவே காரணம் என ஒருதலைப்பட்சமாக செய்திகள் வெளியிடப்பட்டன. எங்கள் கருத்தை யாரும் கேட்கவில்லை.ஆனால் உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும்,” என்று ஆதவ் அர்ஜுனா உறுதியளித்தார்.




















