வெல்லிங்டன்:
ஈரான் மீது மீண்டும் தடை விதிப்பதாக நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை நாட்டின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
நியூசிலாந்து அரசு கூறுகையில், 2015ஆம் ஆண்டு கையெழுத்தான அனைத்துலக “விரிவான கூட்டுத் திட்ட நடவடிக்கைகள் (JCPOA)” உடன்பாட்டின் கோட்பாடுகளை ஈரான் பின்பற்றவில்லை, இதன் காரணமாக புதிய தடைகள் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
புதிய தடைகள் அக்டோபர் 18 (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வரும். இது, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தடைகளை ஈரான் மீது மீண்டும் அமல்படுத்தியதையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.
அந்த நாடுகள், ஈரான் அணு உடன்பாட்டை மீறி செயல்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளன. மேலும், கடந்த ஆகஸ்டில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னில் நடந்த தீவைத்துத் தாக்குதல்களுக்கு ஈரானைச் சேர்ந்தவர்கள் தொடர்புடையதாக ஆஸ்திரேலியா குற்றஞ்சாட்டி, அதன் தூதருக்கு ஏழு நாட்களுக்குள் நாடு விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
நியூசிலாந்தின் புதிய தடைகள் படி,
தடைசெய்யப்பட்ட நபர்களின் சொத்துக்கள் முடக்கப்படும்.
பயணத் தடை விதிக்கப்படும்.
அணு மற்றும் ராணுவப் பொருட்களின் இறக்குமதி, ஏற்றுமதி தடுக்கப்படும்.
ஈரானுடன் பணிபுரியும் போது அதிக விழிப்புடன் இருக்குமாறு நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் நியூசிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“ஐக்கிய நாடுகள் அமைப்பின் தடைகள் மீண்டும் அமல்படுத்தப்படுவது, அனைத்துலக சமூகத்தின் தீவிர அக்கறையை பிரதிபலிக்கிறது. ஈரான் அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை மீறி, யுரேனிய செறிவூட்டலை நியாயமற்ற அளவில் அதிகரித்துள்ளது,” என்று அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்தார்.
மேலும், அணு ஆயுத பரவலைத் தடுக்கும் அனைத்துலக முயற்சிகளுக்கு நியூசிலாந்து எப்போதும் ஆதரவளித்து வருகிறது என்றும், ஈரான் மீண்டும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அனைத்துலக அணுசக்தி அமைப்புடன் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





















