சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் புதிய பாலம் இடிந்தது — உயிர்சேதம் இல்லை

பெய்ஜிங்:

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாநிலத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஹோங்சி (Hongxi) பாலத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பாலம், சீனாவையும் திபெத்தையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகும். நிலச்சரிவு மற்றும் மண் அசைவு காரணமாக, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) மதியம் அந்தப் பாலத்தின் சில பாகங்கள் சேதமடைந்தன.

அதிகாரிகள் கூறியதாவது, உயிர்சேதம் எதுவும் இல்லை, ஆனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) பிற்பகல், மயர்க்காங் நகரம் அருகே 758 மீட்டர் நீளமுடைய அந்தப் பாலத்தில் மண் தளர்ச்சி மற்றும் விரிசல்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து முடக்கப்பட்டது.

பின்னர், அருகிலுள்ள மலைப்பகுதிகளில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகள் பாலத்தின் அடித்தளத்தை பாதித்து இடிவிழ்வை ஏற்படுத்தியதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹோங்சி பாலம் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மட்டுமே திறக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணியை “சிச்சுவான் ரோட் அண்ட் பிரிட்ஜ் குரூப்” நிறுவனம் மேற்கொண்டது என்று அந்த நிறுவனம் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கங்கள் மற்றும் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படும் சிச்சுவான் மலைப் பிரதேசத்தில், இதுபோன்ற கட்டுமானங்களின் பாதுகாப்பு தரம் குறித்து உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தற்போது, புவியியல் நிபுணர்கள் மற்றும் பொறியியல் குழுக்கள் அந்த இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here