அடுத்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவை முன்னிட்டு ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் முன் ஏற்பாடுகளை ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபை ஒருங்கிணைத்து வருகிறது என தேவஸ்தான தலைவர் ஆர். சீத்தாராமன் தெரிவித்தார். பால் அர்ச்சனைக்கான கட்டணம் 5 ரிங்கிட்டாக ஆக உயர்த்தப்பட்டதாக அவர் கூறினார். முடி காணிக்கை, அர்ச்சனை, காவடி, காணிக்கை போன்ற மற்ற அனைத்து கட்டணங்களிலும் எந்த மாற்றமும் இல்லை என இன்று ஈப்போ மகா மாரியம்மன் தேவஸ்தான ஆலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் இந்த ஆண்டு இரதப் புறப்பாடு வழக்கத்தைப் போலவே நடைபெறும் எனவும் காலை 5.00 மணிக்கு விசேஷ பூஜைகள் தொடங்கும் எனவும் அதன் பின்னர் சுங்கை பாரி மாரியம்மன் ஆலயத்திலிருந்து இரதப் புறப்பாடு ஆரம்பித்து, மதியம் 12.00 மணிக்கு குனோங் செரோ கல்லுமலை ஆலயத்தை அடையும் எனவும் பின்னர் பிற்பகல் 3.00 மணியிலிருந்து பால் அபிஷேகம் தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே தைப்பூசத்தன்று காவடி எடுத்துவரும் அன்பர்கள் இரவு 12.00 மணிக்குள் ஆலயத்தைச் சென்றடைய வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் திருகாப்பு நள்ளிரவு 12.00 மணிக்கே மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் கூறினார். தைபூசத்தில் அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், தைப்பூச முதல் நாள் முதல் மறுநாள் வரை ஆலய வளாகத்திற்கு எந்தவொரு வாகனங்களும் நுழைய அனுமதிக்கப்படாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தைப்பூச நிகழ்வை முன்னிட்டு ஆலய வளாகத்தில் தங்கள் வியாபர தலங்களை அமைக்க விரும்புவர்கள் 28-12-2025 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள் என அவர் கூறினார். இதேபோல் காவடி எடுத்துவரும் பக்தர்களுக்கான வழிகாட்டு சந்திப்பு 4-1-2026 அன்று தேவஸ்தான சார்பில் நடைபெறும் கூட்டத்தில் விதிமுறைகள் குறித்த விளக்கங்கள் வழங்கப்படும் என அவர் சொன்னார். தைப்பூச திருநாள் சிறப்பாக நடைபெற பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும், போலீசாரின் அறிவுறுத்தல்களை மதித்து நடக்க வேண்டும் எனவும் சீத்தாராமன் வலியுறுத்தினார்.
செய்தி – படங்கள்: எஸ்.லிங்கேஸ்வரன்





















