சிப்பாங்:
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) ஏரோரெயின் (Aerotrain) சேவை, வரும் மே மாத இறுதிக்குள் மீண்டும் முழுமையாக 24 மணிநேரமும் செயல்பாட்டிற்கு வரும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தச் சேவையின் சீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், தேவையான அனைத்து தொழில்நுட்ப சோதனைகளையும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) நிறைவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற ‘MyKLIA’ மற்றும் ‘MyPutrajaya’ மாதாந்திர பயண அட்டை (MTC) பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் , தொழில்நுட்ப சோதனைகள் குறித்த முழு அறிக்கை நிலப் போக்குவரத்து முகமையிடம் (APAD) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களின் பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் ஆய்வுக்குப் பிறகு, இந்த மாத இறுதியில் இருந்து ஏரோட்ரெயின் இடைவிடாமல் 24 மணிநேரமும் இயங்கும் என்றும், தற்போது பராமரிப்பு மற்றும் தண்டவாளப் பரிசோதனைக்காக இரவு நேரங்களில் சில மணிநேரம் மட்டும் இந்த சேவை நிறுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
சுமார் 25 ஆண்டுகள் பழமையான இந்த ஏரோட்ரெயின் அமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்து வந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட பெரும் இயந்திரக் கோளாறு காரணமாக பயணிகள் தண்டவாளத்தில் நடந்து செல்ல நேரிட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி இந்தச் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனைச் சரிசெய்யும் வகையில், பழைய ரயில்களுக்குப் பதிலாக புதிய ரயில் பெட்டிகளை மாற்றும் திட்டத்தை MAHB செயல்படுத்தியது. இந்த இடைப்பட்ட காலத்தில், பயணிகளின் நடமாட்டத்திற்காக அதிகப்படியான ஷட்டில் பேருந்து (Shuttle Bus) சேவைகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த 24 மணிநேரச் சேவையின் மறுதொடக்கமானது, KLIA விமான நிலையத்தின் சர்வதேச நற்பெயரை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயணிகள் பேருந்து சேவையைச் சார்ந்து இருப்பது குறைந்து, பயண நேரம் மிச்சமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




















