சிரம்பான் துப்பாக்கிச் சூடு: கார் ஓட்டுநர் உயிரிழப்பு — குழு மோதலாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகம்

சிரம்பான் அருகிலுள்ள ஜாலான் ராசா சாலையில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்ததாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.

கார் ஒன்றில் பயணித்திருந்த இரு ஆடவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக அவர் கூறினார். தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் காருக்குள் கிடந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், 43 வயதுடைய நபர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

காயமடைந்த மற்றொரு நபர் தற்போது சிரம்பான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் ஒரு மெய்க்காவலர் (bodyguard) என்றும், சம்பவம் நிகழ்ந்த போது காரை ஓட்டி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்வாங்க விசாரணையின்படி, காலை 7.30 மணியளவில் போர்ட்டிக்சன் டோல் சாவடியை அணுகிக் கொண்டிருந்த அவர்களின் காரை, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறிவைத்து சுட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு குண்டர் கும்பல்களின் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்பது தொடர்பான சந்தேகத்தை போலீஸ் தெரிவித்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here