துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஸ்டிக்கர் மூலம் தங்கம் கடத்தல்: விமான ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது

சென்னை:

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் ‘ஸ்டிக்கர்’ மூலம் தங்கத்தை மறைத்து கடத்த முயன்ற விமான நிறுவன ஊழியர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சுங்கத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, துபாயிலிருந்து வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஊழியர்களே தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்தது. அதன் அடிப்படையில், டிசம்பர் 10ஆம் தேதி காலை 8 மணி அளவில் பயணிகள் வெளியேறிய பின் அதிகாரிகள் விமான ஊழியர்களை கண்காணித்தனர்.

அதில், இரண்டு ஆண் ஊழியர்களின் நடத்தை சந்தேகத்துக்குரியதாகத் தோன்றியதால், அவர்களை சுங்கத்துறை அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். சோதனையில், அவர்கள் உடலின் பத்து இடங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டி மறைத்து வைத்திருந்த 9.460 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ₹11.50 கோடி ஆகும்.

விசாரணையில், துபாயில் விமானம் புறப்படும் முன் நான்கு மணி நேரத்திற்கு முன்னர், ஒருவரிடம் இருந்து தங்கத்தை பெற்று, சென்னை விமான நிலையம் அருகிலுள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக ஊழியர்கள் கூறினர். தங்கத்தை ஒப்படைத்த பின், பல லட்ச ரூபாய் கமிஷனாக கிடைக்கும் எனவும் தெரியவந்தது. மேலும், தங்கத்தைப் பெற ஓட்டல் அருகே இருவர் காத்திருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, தங்கக் கடத்தல் நடவடிக்கையின் முக்கிய புள்ளியையும், தங்கத்தைப் பெற்றுக்கொள்ள காத்திருந்த இருவரையும் கைது செய்தனர்.

மொத்தம் விமான ஊழியர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தக் கடத்தல் வலையமைப்பின் பின்னணி குறித்து சுங்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here