IS தீவிரவாதக் கும்பலை ஆதரித்த வங்காளதேச நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கோலாலம்பூர்:

சமூக ஊடக தளமான பேஸ்புக் மூலம் Islamic State group -பை ஆதரித்ததற்காக குற்றத்தை ஒப்புக்கொண்ட வங்காளதேச நபருக்கு இன்று இங்குள்ள உயர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

29 வயதான உணவக ஊழியர் முகமட் திதாருல் ஆலமுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, ஜூலை 21 அன்று கைது செய்யப்பட்ட நாளிலிருந்து குறித்த சிறைத்தண்டனை அமலுக்கு வரும் என்று, நீதிபதி டத்தோ அசார் அப்துல் ஹமீத் உத்தரவிட்டார்.

“குற்றம் சாட்டப்பட்டவரை சிறைத்தண்டனை முடித்தவுடன் அவரது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தவும் உத்தரவிடப்படுகிறது,” என்று வழக்கு விசாரணையின் போது நீதிபதி டத்தோ அசார் கூறினார்.

மே 27, 2024 அன்று காலை 8 மணிக்கு, புக்கிட் அமானில் உள்ள ராயல் மலேசியா போலீஸ் தலைமையகத்தில் உள்ள சிறப்புப் பிரிவின் E8M (பயங்கரவாத எதிர்ப்பு) பிரிவில், 24வது மாடியில், டவர் 2 இல், அல் முபின் இஸ்லாம் என்ற பெயரில் ஒரு பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி குழுவிற்கு ஆதரவு அளித்ததாக முகமட் திதாருல் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130J(1)(a) இன் கீழ் பதிவு செய்யப்பட்டது, இது அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகுக்கும், மேலும் குற்றத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட எந்தவொரு சொத்தையும் பறிமுதல் செய்ய முடியும்.

வழக்கின் உண்மைகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற தொடர்புடைய உள்ளடக்கங்களை இடுகையிட்டு பகிர்வதன் மூலம் பயங்கரவாதக் குழுவை விளம்பரப்படுத்தியதாக காவல்துறை விசாரணைகள் தெரிவிக்கின்றன.

ஒரு வங்காள மொழிபெயர்ப்பாளரின் பகுப்பாய்வு அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது பேஸ்புக் கணக்கு மூலம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பிரச்சார வீடியோக்கள், அறிக்கைகள் மற்றும் படங்களைப் பரப்பியதை மேலும் உறுதிப்படுத்தியது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன்னய குற்றப் பதிவு இல்லை, ஆனால் இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு கடுமையான குற்றம்” என்று, துணை அரசு வழக்கறிஞர் அப்தல் மாரிஸ் முஹமட் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

இந்நிலையில் வழங்கறிஞரால் பிரதிநிதித்துவம் செய்யப்படாத குற்றவாளி “நான் வேலை செய்ய மலேசியாவிற்கு வந்தேன், என் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் வங்காள மொழியில் கூறினார், இது ஒரு மொழிபெயர்ப்பாளரால் நீதிமன்றத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

இருதரப்பு கோரிக்கைகளையும் விசாரித்து, நீதிமன்றம் அவருக்கு மேற்குறிப்பிட்ட தண்டனையை விதித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here