கோலாலம்பூர்:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பெரிய அளவிலான தீ விபத்துகளைத் தொடர்ந்து, இன்று மாலை 4 மணி நிலவரப்படி, 178 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 697 பேர் 15 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தேசியப் பேரிடர் மேலாண்மை ஏஜென்சியின் (Nadma) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தின் (NDCC) அறிக்கையின்படி, ஒட்டுமொத்த பேரிடர் நிலைமை மேம்பட்டு வருகிறது, மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.
தற்போது, 7 மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளன.
திரெங்கானு மாநிலத்தில் அதிகபட்சமாக 8 நிவாரண மையங்களில் 101 குடும்பங்களைச் சேர்ந்த 326 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சபாவில், தாவாவ் நகரில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து காரணமாக, 36 குடும்பங்களைச் சேர்ந்த 221 பேர் ஒரு நிவாரண மையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கிளந்தான், சிலாங்கூர், பஹாங் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் நிலச்சரிவு தொடர்பான வெளியேற்றங்கள் தொடர்கின்றன.
இந்த நிலையில் நவம்பர் 13ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மூன்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் கிளந்தான் மற்றும் சிலாங்கூரில் ஏற்பட்ட வெள்ளச் சம்பவங்களுடன் தொடர்புடையவை என்று NDCC உறுதி செய்துள்ளது.




















