கோலாலம்பூர்:
மலேசியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையிலும் ஒற்றுமையிலும் அடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், வெறுப்புணர்வை நிராகரித்து, ஒருவருக்கொருவர் அன்புடனும் புரிந்துணர்வுடனும் இருக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்காகபிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர், “ஒவ்வொரு குடிமகனும் மதிக்கப்படும்போதும், பாதுகாக்கப்படும்போதும், நாட்டின் எதிர்காலத்திற்குப் பங்காற்ற அவர்களுக்குச் சமமான வாய்ப்பு வழங்கப்படும்போதுமே உண்மையான ஒற்றுமை வெளிப்படும். பொருளாதார நிச்சயமற்ற நிலை, மனிதாபிமான மோதல்கள் மற்றும் சமூகப் பிரிவினைகளை உலகம் எதிர்கொண்டு வரும் வேளையில், மலேசியா ஒற்றுமை, பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றைத் தனது தேசக் கட்டமைப்பின் அடித்தளமாகத் தேர்ந்தெடுத்துள்ளது” என்று, அவர் நேற்று தனது facebook தளத்தில் வெளியிட்டிருந்த ஓர் பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்த நல்லிணக்கம் என்பது தற்செயலாக நிகழ்வது அல்ல என்று குறிப்பிட்ட பிரதமர், இது நியாயமான கொள்கைகள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையே காட்டப்படும் பரஸ்பர மரியாதையாலேயே கட்டமைக்கப்படுகிறது என்று கூறினார். மதம் மற்றும் இனங்களுக்கு அப்பாற்பட்ட புரிந்துணர்வு கலாசாரத்தை வளர்ப்பதே ‘மடானி’ (Madani) அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்துக் கிறிஸ்தவப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பண்டிகை மலேசியாவிற்கும் அதன் மக்களுக்கும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.























