சபாவில் வெள்ளப்பாதிப்பு அதிகரிப்பு; சரவாக், ஜோகூரில் குறைவடைகிறது

கோலாலம்பூர்:

நாடு தழுவிய அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,523-ஆக உள்ளது. சபாவில் வெள்ளப் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், சரவாக் மற்றும் ஜோகூர் மாநிலங்களில் நிலைமை மெல்ல சீராகி வருகிறது.

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 282-லிருந்து 495-ஆக உயர்ந்துள்ளது. இதில் பியூஃபோர்ட் (Beaufort) பகுதியைத் தொடர்ந்து, தற்போது கோத்தா கினபாலு (Kota Kinabalu) மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பியூஃபோர்ட்டில் உள்ள செலாகோன் மண்டபத்தில் (Dewan Selagon) 315 பேரும், கோத்தா கினபாலுவின் கம்போங் டாராவ் அல்-முனீர் மசூதி மண்டபத்தில் 180 பேரும் தங்கியுள்ளனர்.

அதேநேரம் சரவாக்கில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளதால், நிவாரண மையங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை 943-ஆக குறைந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 8 நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் அதிகபட்சமாக SJK Chung Hua Batu Kawa (211 பேர்) மற்றும் SJK Chung Hua Sungai Tengah (191 பேர்) ஆகிய மையங்களில் மக்கள் தங்கியுள்ளனர்.

மேலும் ஜோகூரில் வெள்ளப் பாதிப்பு கணிசமாகக் குறைந்து, தற்போது 85 பேர் மட்டுமே 5 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். சிகாமாட் (Segamat) மாவட்டத்தில் மட்டும் சில இடங்களில் இன்னும் நீர் வடியவில்லை.

இந்நிலையில் சிகாமாட், புலோ காசாப்பில் உள்ள மூவார் ஆறு (Sungai Muar) இன்னும் அபாயக் கட்டத்திற்கு மேல் (8.72 மீட்டர்) ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பின்வரும் சாலைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன:

மெர்சிங்: ஜாலான் ஃபெல்டா தெங்காரோ 3 (Jalan Felda Tenggaroh 3).

தங்காக்: கேசாங்-சுங்கை ரம்பாய் பாலம் (Kesang–Sungai Rambai Bridge).

வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) இன்று காலை இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை எதனையும் விடுக்கவில்லை என்றாலும், ஆற்றங்கரையோர மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here