பூச்சோங்:
பூச்சோங், மாஜு ஜெயா தொழில்பேட்டையில் உள்ள ஒரு உறைந்த உணவுத் தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், அக்கட்டிடத்தின் 80 சதவீதப் பகுதி எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இன்று (ஜனவரி 7, 2026) அதிகாலை 6.14 மணியளவில், ஜாலான் உத்தாமா 2/18, மாஜு ஜெயா தொழில்பேட்டை (Taman Perindustrian Maju Jaya)யில் தீ ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது என்றும், இதில் சுமார் 40-க்கு 80 மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தத் தொழிற்சாலை கட்டிடத்தில் தீ வேகமாகப் பரவி, பெரும் பகுதி தீயில் எரிந்து நாசமானது என்றும், சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் மொக்தார் கூறினார்.
தகவல் கிடைத்த 10 நிமிடங்களில் (6.24 மணிக்கு) பூச்சோங் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களுடன் பெஞ்சாலா, சைபர்ஜெயா மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 32 தீயணைப்பு வீரர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விபத்து நடந்த போது கட்டிடத்திற்குள் யாரும் இல்லாததால் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் ஏற்பட்ட பண இழப்புகள் குறித்துத் தீயணைப்புத் துறை புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





















